வாரனாசி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக வாரணாசியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் பல மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வில் ரசாயனம், பவுதிகம் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த தேர்வு எழுதத் தடை செய்யப்பட்டோர் பட்டியல் நீட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தவிர தேர்வு மையங்களில் மோசடி நடப்பதைத் தடுக்க கண்காணிப்பும் தீவிரமாக உள்ளது. இருப்பினும் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி, வினாத்தாள் கசிவது போன்றவை நடந்து வருகிறது.

இந்த வருடம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த தகவல் வெளியாகியது.  இதையொட்டி செவ்வாய்க்கிழமை  அன்று ஜெய்ப்பூரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் வாரணாசியில் இருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரில் ஒருவர் பெயர் ஒசாமா ஷாஹித்.  இவர் லக்னோவைச் சேர்ந்தவர்.  மற்றொருவர் பாட்னாவைச் சேர்ந்த அபய் குமார் மேத்தா என்பவர் ஆவார்.  இவர்களோ இருவரும் வாரனாசியில் பந்தேப்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷாஹித் தற்போது லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் ஹால் டிக்கட்டில் மோசடி செய்து நீட் தேர்வை வேறு ஒருவர் மூலம் எழுத வைத்து அதற்காக ரூ.20-30 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.  இவரிடம்  இருந்து 15 ஐடி கார்டுகள், புகைப்படங்கள், மொபைல்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ளன.

அபய்குமார் மேத்தா தனது சகோதரி ஜூலி குமாரி என்பவரை வேறு ஒருவருக்காகத் தேர்வு எழுத வைத்து அதற்காக ரூ..5 லட்சம் பெற்றுள்ளார்.  இவரும் ஷாஹித் தும் அகில இந்திய அளவில் இயங்கும் ஒரு மோசடி குழுவைச் சேர்ந்தவர்கள்.  இவர்கள் மூலம் மற்றவர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.