பாட்னா

பீகார் மாநிலத்தில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.906 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் திடீர் என பண வரவு வரும் போது பலரும் பரபரப்பு அடைகின்றனர்.  ஏற்கனவே ஒரு விவசாயியின் கணக்கில் ரூ.5 லட்சம் திடீர் என வரவு வைக்கப்பட்டது.   அதைப் பிரதமர் மோடி கொடுத்ததாக எண்ணி அவர் செலவு செய்துள்ளார்.  அதன் பிறகு அதை மீட்க வங்கி தரப்பில் முயன்றும் அந்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை.

இது போல் பீகாரில் இரு சிறுவர்கள் கணக்கில் திடீர் என பணம் வந்துள்ளது.  பீகாரில் கதிஹர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆசிஷ் மற்றும் குரு சரண் என இரு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.  பீகார் அரசு அம்மாநில மாணவர்களுக்குச் சீருடை மற்றும் கல்வி செலவுக்கு நிதி உதவி அளிக்கிறது. 

இரு சிறுவர்களும் அந்த நிதியுதவிக்காகக் கிராம வங்கியில் கணக்கு வைத்திருந்தனர்.   பணம் வந்துள்ளதா எனப் பார்க்க அவர்கள் நேற்று முன் தினம் தங்கள் பெற்றோருடன் அருகில் உள்ள ஏடிஎம் சென்று பார்த்துள்ளனர்.   அப்போது ஆசிஷின் கணக்கில் ரூ.6.2 கோடியும் குருசரண் கணக்கில் ரூ.900 கோடியும் வரவு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை அறிந்த அந்த கிராம மக்கள் தங்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் பணம் வந்துள்ளதா என ஏடிஎம்மை முற்றுகை இட்டதால் பரபரப்பு உண்டானது.   

இது குறித்து கதிஹர் மாவட்ட  ஆட்சியர் உதயன் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.  ஆட்சியர், “வங்கி கம்ப்யூட்டரில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் சிறுவர்களின் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாகக் கணக்குக் காட்டுகிறதே தவிர அவர்களின் கணக்கில் அந்த பணம் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.