டெல்லி: 45 வது ஜிஎஸ்டி கவுன்சிலின்  கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி காட்சி மூலமே நடைபெற்று வந்தது. சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இன்று  45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேரடியாக நடைபெறுகிறது. இன்றைய கூட்டம் உத்தரபிரதேச மாநிலம்  லக்னோவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள்  நேரடியாக பங்கேற்கின்றனர்.

இன்றைய கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் வகையில், அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு  வருவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்தால், விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால், மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும்.

இதன்ல் இந்த நடவடிக்கைக்கு கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.  இதுதொடர்பாக பலமுறை ஆலோசித்தும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு ‘சப்ளை’ செய்யும், நிறுவனங்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து 5 சதவீத வரி விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

11 வகையான கொரோனா  மருந்துகளின் மீதான வரிச் சலுகையை டிசம்பர் வரை நீட்டிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.