2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி. ) போலீசாரால் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜாபர் சாதிக் கைது தொடர்பாக என்.சி.பி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்த முயன்ற 50.070 கிலோ சூடோபெட்ரினை என்ற வேதிப் பொருள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் உள்ள அவண்டா நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் அளித்த தகவலின் பெயரில் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

தவிர, கடத்தப்பட இருந்த சூடோபெட்ரினை என்ற வேதிப் பொருள் போதை மருந்து தயாரிக்க உதவும் மூலக்கூறுகளைக் கொண்டது. சர்வதேச அளவில் இந்த வேதிப் பொருள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வேதிப்பொருளை பல்வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியும் என்பதால் இதனை சட்டரீதியாகவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்ற போதும் இந்தியாவில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது.

தேங்காய் துருவல் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் பதுக்கி வைத்து அனுப்பப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து என்.சி.பி. அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர்கள் தந்த தகவலின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து இந்த கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்த கடத்தல் கும்பலுக்கு ஜாபர் சாதிக் தலைவனாக இருந்து செயல்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவனைப் பிடிக்கும் வேலையில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினர்.

இந்த நிலையில் டெல்லியில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் இன்று காலை கைது செய்யப்பட்டான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்திய பணத்தில் திரைப்படங்கள் தயாரித்து வந்ததாகவும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3500 கிலோ சூடோபெட்ரினை போதைப் பொருள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாகக்” குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் “போதைப் பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் சம்பாதித்த பணத்தில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகக்” கூறியுள்ளனர்.