சென்னை: திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் ஒதுக்க முடியாத நிலையில்,  நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) ஒரு இடம் ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதை ஏற்று, மக்களவை தேர்தலில் மநீம கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் இடம்பெற்றுள்ளது. மக்கள் நீதிமய்யத்திற்கு தி.மு.க. ஒரு ராஜ்ய சபா இடத்தை ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தலில் ம.நீ.ம. சார்பில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவுக்கு ஆதரவு உண்டு  என்றும்,  இது நாட்டுக்கான விஷயம் என்பதால் கை கோர்க்கவேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றனர். அதன்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உள்ளது. அதே போல் விசிகவுக்கு 2 தொகுதியும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உடனான முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில்,  இன்று மாலை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்து போட்டியிடும் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக தலைமையை சந்தித்து பேச இருப்பதாக கூறினார். ஆனால், மநீம கட்சியை பேச்சுவார்த்தை திமுக அழைக்காத நிலையில்,  கமல்ஹாசன் தரப்பில்,   கடந்த முறை போட்டியிட்ட கோவை தொகுதியை கமல் கேட்டு வருவதாகவும், மேலும் சென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்க கோரியதாகவும் தகவல்கள் பரவின. இதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திமுக – மநீம இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர்.

நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் கமல்ஹாசன் மக்களை சந்திக்காமல் நேரடியாக ராஜ்யசபாவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், 2024 மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று கூறினார். ஆனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறி கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், கடந்த தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினார். கடந்த  தேர்தல் பிரச்சாரத்தில்,  ’கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் என்று கூறினாலே போதும்’ என்று  கடுமையாக விமர்சனம் செயத்துடன்,  நதிகளை சாக்கடைகளாக மாற்றிவிட்டார்கள் என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் தற்போது பதவிக்காக தனது கொள்கைகளை அடகு வைத்து, திமுகவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.