சென்னை: மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வந்த தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து பெற்ற சான்றிதழ்கள்  அரசின் வேலை வாய்ப்புகளுக்கும், பதவி உயர்விற்கும் இனி பொருந்தாது தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனமானது, மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது, அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் துவங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வினை எழுத முடியும். மேலும், இந்த படிப்பு சிபிஎஸ்இக்கு இணையானது என தேசிய திறந்தநிலைப் பள்ளி அறிவித்து செயல்படுத்தி வந்தது.

இந்த நிலையில், தேசிய திறந்தநிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்ததற்கு சமமானது என சான்றிதழ் வழங்கக் கோரி, தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையிலும், உயர் கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் கடந்த டிச.21ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், “உயர்கல்வி மன்ற கூட்டத்தின் முடிவின்படி, திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தில் படித்து 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெற்றவர்களின் கல்வித் தகுதியை, தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. அதன் அடிப்படையில் அரசு பணி வேலை வாய்ப்பு, பதவி உயர்விற்கு அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.