சென்னை: குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், அவர்களின் பெயர் இந்த மாதத்துடன் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் மிரட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரேசன் கடைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.  அவ்வப்போது ரேசன் கடைக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பல பகுதிகளில் ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களை மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது,  குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், அவர்களின் பெயர் இந்த மாதத்துடன் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் மிரட்டல் மற்றும்  எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், பல இடங்களில் ரேசன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மிழகத்தில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என்ற அடிப்படையில், PHH, PHH- AAY, NPHH, NPHH-S, NPHH-NC பல்வேறு பிரிவுகளில் அட்டைதாரா்கள் பிரிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கும் ரேஷன் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகளில் விரல்ரேகைப் பதிவு செய்த பின்னர் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

அதேவேளையில், நேரில் வந்து விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்களைப் பெற முடியாத மாற்றுத் திறனாளிகள், வயது முதிா்ந்தோா்கள்,  அதற்கான உரிய படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபா் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும்.

ந்த  நிலையில், சில மாதங்களுக்கு  குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை முன்பு கொண்டு வரப்பட்டது. அதாவது, அட்டையில் பெயா் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத்தொடர்ந்து, , குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், தற்போது (பிப்ரவரி) இந்த புதிய  நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,   சென்னை உள்பட பல்வேறு ஊா்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேசன்அட்டைதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்யும்  நடைமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து கூறிய ரேஷன் கடை ஊழியர்கள் ,  “வங்கிகளில் வாடிக்கையாளா்களின் விவரத்தை உறுதி செய்ய தனி படிவம் அளிக்கப்பட்டு விவரம் பெறப்படும். அதுபோன்ற நடைமுறையே நியாயவிலைக் கடைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள ஒட்டுமொத்த அட்டைதாரா்களின் பெயா், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்து அளிக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அதன்படி, இந்த மாதத்தில் பொருள்கள் வாங்க வரும் அட்டைதாரா்களிடம், ‘அட்டையில் பெயா் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், பல நியாயவிலைக் கடைகளில், விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயா்கள் நீக்கப்படும் என ஊழியா்கள் மிரட்டுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், இதுகுறித்து தமிழ்நாடு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, தேர்வு காலம் தொடங்கி இருப்பதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சூழலில்  குடும்ப அட்டையில் பெயா் உள்ள  அனைவரின் விரல் ரேகையையும்,  நியாய விலைக் கடைகளுக்கு அழைத்து வந்து பதிவிட இயலாத நிலை இருப்பதாகவும், அதனால் விடுமுறை தினங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் தனியாக முகாம் அமைத்து விரல் ரேகைகளை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.