நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த நந்தகுமார் என்பவரை, வரும் 6ம் தேதி வரை சிறையிலடைக்க மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், அரசு  மருத்துவமனை டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 7 பேர் நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்(42), கடந்த 16ம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணை  நடத்தினர்.  டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையிலான விசாரணை குழுவினர், நந்தகுமாரை கடந்த 5 நாட்களாக சேலத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, நர்ஸ் அமுதவள்ளி மூலம் பெறப்பட்ட குழந்தைகள் தமிழகத்தில் எங்கெல்லாம் விற்பனை  செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்குள் எத்தனை குழந்தைகள் சட்டவிரோதமாக கொல்லிமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு பதில் பெற்றனர்.

5 நாள் விசாரணை முடிந்ததையடுத்து, நந்தகுமாரை நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் வடிவேல் முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வரும் 6ம் தேதி வரை நந்தகுமாரை சிறையில்  அடைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.