நமிதாவை மிரட்டக் கூடாது! : வீட்டு உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

Must read

வாடகை வீட்டில் வசிக்கும் நடிகை நமீதாவை, வீட்டின் உரிமையாளர் காலி செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை நகர 13 வது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்பட நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரன் என்பவருக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், நமீதா புகார் செய்தார்.  அங்கு ஏதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று ஒரு அவசர வழக்கை நமீதா தாக்கல் செய்தார்.

அதில்,”நான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் என்னை வீட்டை விட்டு காலி செய்யும் படி மிரட்டுகிறார்.  ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.

என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும் . என்னை ரவுடிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகள் மூலமும் தொந்தரவு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு தடை விதிக்கவேண்டும்”’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி , வீட்டின் உரிமையாளர் நமீதாவை  அடியாட்கள் மூலம் மிரட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.  நமிதாவை வீட்டைவிட்டு காலி செய்யும்படி வற்புறுத்தக்கூடாது” என்று தடை விதித்தும்’ உத்தரவிட்டுள்ளார்.

 

More articles

Latest article