இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை ஆதரித்து, நமல் ராஜபக்ஷ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இலங்கை நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித்பிரேமதாசா உட்பட மொத்தம் 41 பேர் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எதிர்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக பார்க்கப்படும் கோத்தபய ராஜபக்ஷவுக்கு பல்வேறு இலங்கை கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் கடும் போட்டியை அவர் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், இலங்கையின் வடமாகாணத்தில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வாவுனியாவில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் திரளான அளவில் தமிழர்கள் பலர் பங்கேற்றது அந்நாட்டு ஊடகங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இக்கூட்டத்தில், கோத்தபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு கோரிய அவர், தொடர்ந்து மன்னார் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் ஆதரவு கோரினார்.

தேர்தலுக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிக்க அந்நாட்டு ஊடகங்களும், பிரபல ஜோதிடர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.