சென்னை: மதிமுகவில் ஏற்பட்டுள்ள தொய்வைச் சரிசெய்வது தான் என் முதல் இலக்கு என மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோவின் மகன்  துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

குடும்ப அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த வைகோவின் மகனும் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார்.  இவர் தொழிலதிபராக வலம் வந்த நிலையில், சமீப காலமாக, அரசியல் ஆர்வம் காட்டி வந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்களை ஆதரிரத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்தொடர்ச்சியாக அவர் அரசியலுக்கு வருவார் என்று பேச்சு அடிபட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவரை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக 20ந்தேதி நடைபெற்ற  நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகளின் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றார்.  துரை வையாபுரிக்கு தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, துரை வைகோ செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, மதிமுக  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மதிமுக தலைமை எனக்குத் தலைமைக் கழகச் செயலாளர் என்ற பொறுப்பை கட்டி எனக்கு  கொடுத்திருக்கிறது.

இதற்கு கட்சியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 106 பேரில் 104 பேர் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 2 பேர் மட்டுமே வாக்களிக்கவில்லை.  இவ்வளவு பேர் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனக்கு வாக்களிக்காத இருவரும், ‘தம்பிக்கு நாம் வாக்களிக்கவில்லையே’ என்று வருத்தப்படும் அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்/ அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற மனச்சுமை என்னிடம் இருக்கிறது.

கட்சியின் பொறுப்பை ஏற்றிருப்பது, ஒரு மலையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டது போன்ற சுமையாகவும் சவால் நிறைந்த பயண மாகவும் உணர்கிறேன். தலைவர் வைகோவைப்போல செயலாற்றல், சொல்லாற்றல் எனக்குக் கிடையாது. ஆனாலும் என்மீது தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் என்னால் முடிந்த வரை உழைக்கத் தயார்.

6 சதவிகிதமாக இருந்த மதிமுகவின் வாக்கு வங்கியில் கடந்த சில வருடங்களாக சிறிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தொய்வைச் சரிசெய்வது தான் என் முதல் இலக்கு. அதைச் சரிசெய்து முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதற்காக நான் கடமையாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.