ரெய்டு பயம்? ஜெயலலிதாவை போன்று மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் புகழாரம்…

Must read

மதுரை: ஜெயலலிதாவை போன்று மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் புகழாரம் சூட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக பல முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்த பயத்தினாலேயே செல்லூர் ராஜூ பேசியிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. மேலும் பல மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதை பாராட்டுகிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதனை விரைவில் சீரமைக்க வேண்டும்.

மதுரையில் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல்கள் தொடர்பாக, தற்போது திமுக அரசு ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான செல்லூர் ராஜு ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெர்மோக்கோல் முன்னாள் அமைச்சருக்கு ரெய்டு பயம் வந்துவிட்டது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

More articles

Latest article