குதிரை பேரம்: ஊராட்சிகளில் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்….

Must read

சென்னை: ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு  மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வார்டு உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும் அரசியல் கட்சிகள் குதிரை பேரம் நடத்தி வருகின்றன.

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று கடந்த 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 90% வெற்றிகளை திமுகவே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இதையடுத்து, ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளை பிடிக்க கட்சியினர் களமிறங்கி உள்ளனர். மறைமுகத் தேர்தல் என்பதால், யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தெரியாது என்பதால், ஒவ்வொரு கட்சியும், தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, லட்சக்கணக்கில் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பல இடங்களில் குதிரை பேரம் நடந்து  உள்ளது. பெரும்பாலான ஒன்றியங்களில் தி.மு.க.,வே வென்றுள்ளதால், ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளை பிடிக்க திமுகவினரே தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இதனால் சில பகுதிகளில் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்ட அவலங்களும் அரங்கேறி உள்ளன.

உட்கட்சி பூசல் வெடித்து, கட்சி நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தின் 21 ஒன்றிய இடங்களில் 15ஐ தி.மு.க., கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மையுடன் இருப்பதால், தி.மு.க., உறுப்பினர் ஒருவரே ஒன்றியக்குழு தலைவராக வர உள்ளார். ஆனால் இரு கோஷ்டியாக உள்ளதால், யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.

பல அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மாறிவிட்ட நிலையில், இருக்கும் சிலரையும் தங்களது ஆதரவாளராக மாற்ற திமுக முயற்சித்து வருகிறது. இதனால், பல வார்டு கவுன்சிலர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளும்  நடைபெற்றுள்ளன. அதுபோல சில பகுதிகளில்,  துணைத் தலைவர் பதவியை, அ.தி.மு.க.,வினர் கைப்பற்ற, தி.மு.க.,வினரிடம் பேச்சு நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறைமுக தேர்தலில் அனல் பறக்கும் என்பதால், தேர்தல் நடைபெற உள்ள ஒன்றிய அலுவலகங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில், ஒன்றிய கவுன்சிலர்களை வாகனங்களில் அழைத்து வரும்போது, பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

More articles

Latest article