சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை  இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை (மே 29) தொடங்குகிறது.

வைகாசி விசாகம் என்பது தமிழ் மாதமான வைகாசியில் வரும் விசாக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் அவதரித்த நாளாக கருதப்படும் வைகாசி விசாகம் மே 30-ஆம் தேதி முருக பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பக்தர்கள் அதிகாலையில் நீராடி, முருகனுக்குரிய மந்திரங்களைச் சொல்லி, விரதம் மேற்கொள்வது வழக்கம்.

மாலையில் முருகன் கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதால், கர்ம வினைகள் நீங்கி நல்வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.மகிமை: 27 நட்சத்திரங்களில் குருவின் ஆதிக்கம் கொண்ட விசாக நட்சத்திரம் மேன்மையான பலன்களைத் தரவல்லது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் (தற்போதைய நிலவரம்):திருச்செந்தூர்: வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 4 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தென் மாவட்டங்களில் உள்ள முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்களான பழனி, திருச்செந்தூர் ஆகியவற்றுடன் மதுரையில் உள்ள முருகனின் முதல் மற்றும் ஆறாவது படைவீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் வைகாசி விசாக நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

இந்நிலையில், மே 30-ஆம் தேதி நடைபெறவுள்ள வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06155), சென்னை எழும்பூரில் இருந்து மே 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் மே 30ஆம் தேதி அதிகாலை திருச்செந்தூரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06156), திருச்செந்தூரில் இருந்து மே 30-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 11.15 மணியளவில் புறப்பட்டு, மே 31ஆம் தேதி காலை 11.30 மணியளவில் சென்னை எழும்பூரை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில், இரண்டடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் 2, இரணடாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள் 12, முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் 2, மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் இருமார்க்கத்திலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட இரு ரயில்களுக்கும் முன் பதிவு நாளை (மே 28) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]