இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 2016 – 2021 வரை இருந்த ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது.

டெண்டர் முறைகேடு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களிலும் பலகோடி முறைகேடு செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழ்நாட்டின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி கூறியுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் விரிவான விசாரணை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ள சிஏஜி இதன்மூலம் பல கோடி ரூபாய் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கிறது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U) கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இதில், கிராமப்புறம் (PMAY-G) திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கு இது முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது.

எடப்பாடி ஆட்சியில் பயனாளிகள் தேர்வு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த ஆட்சியில் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை (சிஏஜி) அம்பலப்படுத்தியது.

அதேபோல், 5 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் 2 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், இதில் 3,354 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் முறைகேடு நடைபெற்றதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இதேபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி வெளியிட்டிருக்கும் தகவல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்…