தேர்தல் கூட்டணியில் பேரம் பேசுவதில், பாமக நிறுவனர் ராமதாஸ், எப்போதுமே திறமையானவர் என்று பெயரெடுத்தவர். பாஜக ஆதிக்கம் செலுத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவிடம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட 7+1 என்ற கணக்கில் தொகுதிகளை வாங்கினார்.

எனவே, இந்த சட்டமன்ற தேர்தலில், பழனிச்சாமிக்கான நெருக்கடி இன்னும் அதிகரித்துள்ள நிலையில், எப்படியும் 40 இடங்களுக்கு குறையாமல் ராமதாஸ் வாங்கிவிடுவார் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், நிலைமை அப்படியே மாறிவிட்டது. வெறும் 23 இடங்களுக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டது பாமக.

உள்ஒதுக்கீடு அறிவிப்பை அதிமுக ஏற்றுக்கொண்டது மற்றும் தேவையான அளவிற்கு ஸ்வீட் பாக்ஸ்களை வழங்கியது போன்றவையே பாமக தொகுதிகளை குறைத்துப் பெற்றுக்கொள்ள காரணம் என்று சிலர் கூறினார்கள். ஆனால், ஸ்வீட் பாக்ஸ்கள் பெறுவதென்பது, கூட்டணி பேரத்தில், பாமகவை பொறுத்தவரை வழக்கமான நிகழ்வே என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள். மேலும், வன்னியர் உள்ஒதுக்கீடு அறிவிப்பால், நிலைமை பாமகவுக்கு சாதகமாக அமைந்தால், அக்கட்சி சற்று கூடுதல இடங்களில் போட்டியிட்டாலும் நல்லதுதானே! குறைந்தபட்சம் 30 இடங்களையேனும் பெற்றிருக்கலாமே!

ஆனால், எப்படி இதுவரை பெரிய கூட்டணிகளில் பெற்றிராத அளவிற்கு குறைந்தளவு இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்? என்ற கேள்வி எழும்போது, கள நிலவரம், ராமதாஸ் & கோ., விற்கு எதிராக இருக்கிறது என்றே தகவல்கள் வெளியாகின்றன. எனவேதான், அதை உணர்ந்துதான், அவர்கள் 23 இடங்களுக்கு எளிதாக செட்டில் ஆகிவிட்டார்கள் என்கிறார்கள்.

10.5% உள்ஒதுக்கீடு, பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தாத காரணத்தால், அவர்கள் வாங்குவதை வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிட்டதாக விமர்சித்தனர் சில அரசியல் பார்வையாளர்கள். மேலும், அந்த அறிவிப்பு தற்காலிகமானதே! என்று துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சர்கள் பேசுவதும் பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சரி, அதுவரையான நிலைமை அப்படியிருக்க, தற்போது தேர்தல் பிரச்சார களம், பாமகவுக்கு இன்னும் மோசமாக இருக்கிறது. அந்தக் கட்சிக்கு எதிராக, மறைந்த காடுவெட்டி குருவின் ஒட்டுமொத்த குடும்பமும் களமிறங்கியுள்ளது. குருவின் மனைவி, அவரது மகன் கனலரசன் துணையுடன் ஜெயங்கொண்டம் தொகுதியில் கமல் கூட்டணியில் களம் காண்கிறார். இது அத்தொகுதியில் போட்டியிடும் பாமகவுக்கு பெரிய சவால்.

மேலும், குருவின் தங்கை மற்றும் மகள் விருதாம்பிகை இருவரும், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்கள். குருவின் மருமகன்களும் பாமகவை ஒரு கை பார்த்துவிடுவது என்று களத்தில் நிற்கிறார்கள்.

இன்னொரு பக்கம், சி.என்.ராமமூர்த்தி மிகவும் உக்கிரமாக பாமக எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம், வேல்முருகன் மற்றும் அவரின் ஆதரவு வட்டத்தினர் பாமகவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கி வேலை செய்கின்றனர்.

ஆக, மிகவும் மோசமான அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிமுக – பாஜக கூட்டணியில், பாமக இடம்பெற்றிருப்பது ஒரு சவால் என்றால், சொந்த சாதியில் எதிரிகளாக இருப்பவர்களின் அரசியல் தாக்குதல் மற்றொரு மிகப்பெரிய சவாலாக சூழந்து நின்று அக்கட்சியை தள்ளாடச் செய்கிறது.

இந்த சவால்களை பாமக வெற்றிகரமாக முறியடிக்குமா? தோற்குமா? என்பது மே 2ம் தேதி தெளிவாக தெரிந்துவிடும்.