சென்னை: அமைச்சர் மாபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடி தொகுதியில் மளிகை கடை ஒன்றில் வாக்காளர்களுக்காக கொடுக்கப்பட வைக்கப்பட்டிருந்த ரூ. 4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதனால் தோல்வி பயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆதரவாளர்கள், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பணப்பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.

இந் நிலையில் நாகம்மை நகரில் மளிகை கடை ஒன்றில் இருந்து ரூ. 4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க அதிமுகவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் நாளையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், அவசர, அவசரமாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.