கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என்று அகில இந்திய தலைவர்கள் முதல், அண்டை மாநிலமான கர்நாடக, கேரளா-வில் இருந்தும் இவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தொண்டர்கள் புடை சூழ கோவையில் உள்ள பிரபல உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டார்.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, தாங்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க முயன்ற போது, காசாளர் அதை வாங்க மறுத்ததாகவும், தாங்கள் பிற அரசியல்வாதிகளை போல் இல்லையென்று கூறி கட்டணம் செலுத்தி விட்டு வந்ததாக பெருமை பொங்க பதிவிட்டுருந்தார்.

இதற்கு பதிலளித்த நிர்வாகம், தங்கள் உணவகத்தில் சாப்பிடும் யாரும் பணம் தராமல் சென்றது இல்லை, அப்படி யாரும் நிர்பந்தித்ததும் இல்லை என்றும், சமூகத்திற்காக உழைக்கும் சிலருக்கு தங்கள் உணவகத்தில் அவர்களின் சேவையை கருதி அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக சில நேரங்களில் நாங்கள் கட்டணம் பெறுவதில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன், கோவை மாநகரில் உ.பி. முதல்வர் வந்தபோது கடைகள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததை நினைவு கூர்ந்த நெட்டிசன்கள், அந்த விவகாரத்தை மறைக்கவே தேஜஸ்வி, ஹோட்டலில் கட்டணம் செலுத்தியதை விளம்பர படுத்தி இருக்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.