சென்னை: வீடுகளில்  ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதன்பிறகு, ஒவ்வொரு வரியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொத்து வரி, கழிவுநீர் வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்பாது மின் கட்டண உயர்வையும் அறிவித்து உள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்க ளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உய்தற்ப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் திமுக அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மின் ஊழியர்கள், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். அதை பரிசீலிப்பதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி , 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என விரும்புவோர்,  கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றார்.

மேலும், வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியவர், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாகத்தான் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.