பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண்

Must read

நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை மற்றும்  சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. அப்போது அரசு பணி மற்றும்  சத்துணவு அமைப் பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி  பலரிடம் ரூ.76 லட்சம்  அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு நாமக்கல் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில், சரோஜா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, நீதிமன்றம்,  வழக்கு சம்பந்தமாக ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை தொகையை செலுத்தி ஜாமின் பெறலாம் என உத்தரவிட்டது.

அதன்படி, இன்று ராசிபுரம் நீதிமன்றத்தில் சரோஜா சரணடைந்துள்ளார். சரோஜாவின் கணவர் யோக ரஞ்சனும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரும் சரணடைந்தார்.  இருவருக்கும் தலா பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் கட்டி ஜாமின் பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்து சரோஜா ஜாமின் கோர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article