சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடத்திய சோதனையில், கோடநாடு எஸ்டேட்டில் காணாமல போனதாக கூறப்படும் சில நிலப்பத்திரங்கள், சசிகலாவுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்தும் கைப்பற்றப்பட்டது. இதை மேற்கோள் காட்டி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,  இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட வருகிறது.

இதைத்தொடர்ந்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் புதிதாக கிடைக்கும் தகவல்களை கொண்டு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடமும் (ஜெயா டிவி நிர்வாகி) ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.  அதைத்தொடர்ந்து தற்போது சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கோடநாடு பங்களாக கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.