சென்னை:

ன்று சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இன்ரு தினத்தந்தி நாளிதழின் பவளவிழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்திருக்கும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இங்குகிறார்.

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபம் வந்தடைவார்.

அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு,  காலை 11.35 மணிக்கு காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

பின்னர், மதியம் 12.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 12.15 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், 12.40 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மோடியின் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருந்து கோபாலபுரம் செல்லும் பிரதமர், அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதையை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.