ரோடு

ரூ. 7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலைகளை விற்க முயன்ற மூன்று கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் சிலர் சாமி சிலைகளை கடத்தி வந்து விற்க முயல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.   இதையொட்டி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் அமைந்த குழுவினர் ஈரோடு சென்று கண்காணித்து வந்தனர்.

அபோது ஈரோடு – மேட்டூர் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு அறையில் சந்தேகத்துக்குரிய வகையில் சிலர் நடமாட்டம் காணப்பட்டது.   அந்த அறையில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.   அங்கு மரகதலிங்கம், மற்றும் மரகத நந்தி சிலைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.    அந்த அறையில் தங்கி இருந்த கஜேந்திரன், சந்திரசேகரன், மணிராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து போலிசார் விசாரித்தனர்.

இது குறித்து ஐ ஜி பொன் மாணிக்கவேல், “ திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலைகள் ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.    இது தொடர்பாக மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.    இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீஸ் தேடி வருகிறது.   இந்த சிலைகள் சுமார் 1200  ஆண்டுகளுக்கூ மேல் பழமையானது.  இதன் மதிப்பு ரூ. 7 கோடிக்கு மேல் இருக்கும்” எனக் கூறினார்.