கோயம்புத்தூர்  ராஜினாமா செய்துவிட்டு வரும் எம்.எல்.ஏக்களை சேர்த்துக்கொண்டால்  அது தவெகவுக்கு அவப்பெயர் உண்டாகும், தவெக அரசு கவிழ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என விசிக தலைவர் திருவாளவன்  கூறி உள்ளார்.

உங்கள் ஆட்சி கவிழ எந்த சூழலிலும் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையுடன் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். அதனால், யார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது தவெக மீதான நம்பகத்தன்மையை பாதிக்க செய்யும் குதிரை பேர விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது என்பது தங்களது விருப்பம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக  கோவை  வந்திருந்த திருமாவளவன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  பெரம்பலூர்  மாவட்டத்தில்,  குன்னத்தில் விசிக, திமுகவினர் மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறியவர், இந்த  சம்பவம் கவலை அளிக்கிறது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருப்பது வேதனை தருகிறது.

அதனால்,  சமூக ஊடகங்களில் வரக்கூடிய அவதூறுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்வினை ஆற்றவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதுபோல ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை முன்பே கேள்விப்பட்டு, அதை தவிர்க்க வேண்டும் என கூறியிருந்தேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அந்த தகவலை அறிந்து ஆர்ப்பாட்டத்தை தவிர்த்தனர். ஆனால், தகவல் அறியாத தோழர்கள் அங்கு கூடியிருந்தார்கள். திமுகவைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருக்கிறார்கள். இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இனி அவ்வாறு நடக்க இயக்கத் தோழர்கள் இடம் கொடுக்கக்கூடாது என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசியலில் தவெக பெரும்பான்மைக்காக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருகிறதே என்ற கேள்விக்கு,  “இதை ஆரோக்கியமான அரசியலாக விடுதலை சிறுத்தைகள் நினைக்கவில்லை. இங்கு குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சியமைப்பதற்கு விசிக ஆதரவளித்தது. வெளியில் இருந்து ஆதரவு என்ற முடிவை மறுபரிசீலனை செய்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக தரப்பில் அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று மீண்டும் கலந்தாய்வு செய்து அதன் அடிப்படையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம்”

என்றவர்,  “தவெக தலைவருக்கும் முன்னணி தலைவர்களுக்கும் ஒன்றைச் சொல்கிறேன்.  உங்கள் ஆட்சி கவிழ எந்த சூழலிலும் இடம் கொடுக்க மாட்டோம்.  அந்த நம்பிக்கை யுடன் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். அதே சமயம் இந்த (குதிரை பேர) விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது என்பது எங்கள் விருப்பம்” என தெரிவித்தார்.

அதிமுக குறித்த கேள்விக்கு,  “அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே சுட்டிக் காட்டியிருந்தேன். பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் விளைவாக, அதிமுகவின் ஆதரவை பெறுவதில் நெருடல் இருந்ததாக தவெக தலைவர்கள் கூறியிருந்தனர். ஒருவேளை அதிமுக தனித்து போட்டியிட்டிருந்தால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியை முன்னெடுத்திருந்திருக்க  வாய்ப்பிருந்திருக்கலாம், ஆனால்,  அதிமுகவுக்கு தற்போது நெருக்கடி சூழல் உருவாகி இருப்பதாக நான் கருதுகிறேன்.

இருப்பினும், தவெக தலைமை, அதிமுக எம்எல்ஏக்களை இழுப்பது  போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது. யார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான நம்பகத்தன்மையை பாதிக்க செய்யும். எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” .

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]