டில்லி

பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்தது உண்டு.  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறைந்தது.  சென்ற ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் சென்ற பிறகு மோடி பெரிய அளவில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.  இந்நிலையில் அவர் 4 நாட்கள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்

பிரதமர் மோடி அமெரிக்காவில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டுத் தலைவர்களுடன் நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.  அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.    நாளை காலை 11 மணிக்கு மோடி இந்தியாவில் இருந்து புறப்படுகிறார்.

அவர் செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று ஜப்பான் பிரதமர் ஹோஷிஹைட் சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.  பிறகு அமெரிக்காவின் முன்னணி நிறுவன உயர் அதிகாரிகளுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.   அந்த வரிசையில் அவர் ஆப்பிள் நிருவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் உடன் சந்திப்பு நிகழ்த்துகிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ளும் மோடி துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்தித்துப் பேச உள்ளார்.  மேலும் ஜோ பைடனுடன் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.  பிறகு குவாட் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வலியுறுத்த உள்ளார்.

அதற்கு அடுத்த நாள் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் செல்லும் மோடி ஐநா சபை பொதுக் கூட்டத்தில் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார்.   அதன் பிறகு அவர் 27 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார்.