நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை பொறுப்பு கடந்த 18 மாதங்களாக நிரப்பப் படாமல் உள்ளது ஏன் ? சர்வதேச சந்தையில் 21000 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் நேற்று சுமார் 3000 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத் வந்த இந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 21000 கோடி என்று கூறப்படுகிறது.

உலகளவில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்பட்டது இல்லை, அதானி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டதே இதுவரை இல்லாத அதிக அளவு போதைப் பொருளாகும்.

இந்த போதை மருந்து இந்தியாவில் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் குஜராத் வழியாக பெருமளவில் இந்தியாவுக்குள் கடத்தப் படுவதும், அதில் சில பிடிபடுவதும் அதிகரித்து வருகிறது.

நாட்டின் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் இந்த போதை மருந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்பது குறித்தும் இந்த கடத்தல் கும்பல் குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் மெஹ்ரா மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

மேலும், துறைமுகங்கள் தனியார் வசம் உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், போதை பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இப்பொழுது பிடிபட்ட போதை பொருள் மிகப்பெரிய அளவாக சொல்லப்படும் நிலையில், 2017 ம் ஆண்டு 3500 கோடி ரூபாய் மதிப்புடைய 1500 கிலோ ஹெராயின், ஜனவரி 2020 ல் 175 கோடி மதிப்புடைய போதை பொருள் ஆகியவை குஜராத் வழியாக கொண்டுசெல்லும் போது பிடிபட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 150 கோடி மதிப்புள்ள கஞ்சா பிடிபட்ட நிலையில், தற்போது இரண்டு கன்டெய்னர்களில் வந்த 3 டன் எடையுள்ள போதை மருந்து பிடிபட்டுள்ளது, இதன் மதிப்பு 9000 கோடி ரூபாய் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் துறைமுகம் வழியாக தொடர் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து முழுமையான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கெஹ்ரா கேட்டுக்கொண்டார்.