சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில்  இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி)  பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேனும், அடுத்த 2-3 நாட்கள் டமால் டுமீல்ஸ என பதிவிட்டுள்ளார். இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலைமுதலே மழை பெய்தது. சென்னையில் கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம்,அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

மேலும், இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், அடுத்த 2-3 நாட்கள் டமால் டுமீல்ஸ் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மீண்டும் வருவார். தெளிவான வானம், இரவில் இடியுடன் கூடிய மழைக்கு உகந்த நாள். சென்னை மற்றும் KTC, மதுரை, கொடை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருச்சி, கரூர், டெல்டா, குமரி, பகுதிகள் ஆகிய பகுதிகளும் கூட மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 22ம் தேதி இரவு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.