சென்னை:  சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தினம் தொடர்பாக வாழ்த்துச் செய்தியும் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் 384வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையை சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா? என்று தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சென்னை நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்! கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’! என்று சென்னை நாளை கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் என கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் எபிக் சாகா ஆப் தி சோழாஸ் உள்ளிட்ட 3 புத்தகங்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனிடையே, சென்னை தின கொண்டாட்டத்தை ஒட்டி பாண்டி பஜாரில் உணவு திருவிழா திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

“நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தம் ஆக்குமடா” சென்னை தினத்தின் சிறப்பு புகைப்பட கண்காட்சி சென்னை தினத்தையொட்டி அடையாறில் அமைந்துள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

காலனி ஆதிக்கத்தின் போது இருந்த சென்னையின் வரலாறு, பண்பாடு, சமூக அமைப்பு, அரசு ஆவணங்கள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வந்தது முதலான கடிதப் போக்குவரத்து, வியாபாரிகளின் கடிதங்கள், சென்னை ஜார்ஜ் கோட்டை குறித்தான ஆவணங்கள், 1800-களின் சென்னையின் மக்கள் தொகை பற்றிய குறிப்புகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு ஜூலை 17-ல் கருணாநிதி தலைமையிலான அரசு மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என்று அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. 2004-ல் சென்னை தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆக.22ல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.