டில்லி

மோடி பதவி ஏற்பு விழா விருந்தின் சாப்பாட்டு பட்டியல் வெளியாகி உள்ளது.

மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்கும் விழா வெகு சிறப்பாக இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. இதில் பல பிரபல அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள்,நடிகர்கள், அறிவாளர்கள் என பலரும் கலந்துக் கொள்கின்றனர். இதில் முகேஷ் அம்பானி, பில் கேட்ஸ் போன்ற தொழிலதிபர்கள் முதல் கங்கணா ரணாவத் போன்ற பாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொள்கின்றனர்.

இதை ஒட்டி அனைவருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு முன்பு தேநீர் விருந்து ஒன்றும் விழா முடிந்த பிறகு இரவு விருந்தும் நடக்க உள்ளன. இந்த விருந்தை முன்னின்று தயாரிக்கும் குடியரசு தலைவர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் மசிந்திர கெஸ்சூர் இது குறித்த பட்டியலை கூறி உள்ளார்.

தேநீர் விருந்தின் போது சமோசா மற்றும் சாண்ட்விச்கள் அளிக்க்கப்பட உள்ளன. இரவு விருந்தில் இந்திய பருப்பு வகைகளில் முதல் இடம் பெற்றுள்ள உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளும் தக்காளி சாறும் இடம் பெறும் உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ”தால் ரெசினா” முக்கிய உணவாகும். இதை தயாரிக்க சுமார் 8 முதல் 10 மணி நேரம் ஆகும்.

இதை தவிர அசைவ உணவான சிக்கன் மலாய் டிக்கா, தஹி கபாப், சிக்கன் குருமா என கோழி வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீரி உணவு வகைகள் பெருமளவில் தயாராகி வருகின்றன. ஆட்டிறைச்சி உணவுகளும் தயாரிப்பில் உள்ளன. இதை தவிர பாஸ்மதி மற்றும் சாதாரண அரிசி சாதம் தயாரிக்கப்படுகிறது. மோடியின் விருப்ப உணவு சாதம் மற்றும் தால் ரைசினி என்பது குறிப்பிடத்தக்கது.