கோவை:

மல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக கோவை மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளரின் வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக, திமுகவுக்கு உள்ள வாக்கு வங்கி எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த தேர்தலில் அதிமுக வாக்கு வங்கியை டிடிவியின் அமமுக  சிறிது அசைத்து பார்த்துள்ள நிலையில், புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  சில இடங்களில் அபாரமாக வளர்ச்சி கொண்டுள்ளது.

சென்னை, கோவை உள்பட சில இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறிப்பிட்ட அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளது. மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புத்தூர், புதுச்சேரி, கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் ராமநாத புரத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதிமய்யம்.  தமிழகத்தில் 5வது இடத்துக்கு மநீம தள்ளப்பட்டாலும், அதிமுகவின் வாக்கு வங்கியை உடைத்து, இளைஞர் சமுதாயத்தின் வாக்குகளை பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.

நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில்  வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 5 இடங்களிலும் மண்ணை கவ்வி உள்ளது. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் பாஜக தனது வேட்பாளராக சி.பி.ராதா கிருஷ்ணனை களமிறக்கி இருந்தது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வுக்கு தனி செல்வாக்கு உண்டு என்பதால், அதிமுக மற்றும் பாஜக வாக்குகளால்  சிபிஆர் வெற்றி பெறுவார் என பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தன. ஆனால், தேர்தல் முடிவோ வேறு மாதிரியாக அமைந்தது.

கோவை மக்களவைத் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்), ச.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி), ரா.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்), ப.கோவிந்தன் (பகுஜன் சமாஜ்), பு.மணிகண்டன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) மற்றும் சுயேச்சைகள் என்.ஆர்.அப்பாதுரை (அமமுக) உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இதில்திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன்  571150 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் 392007 வாக்குகள்  மட்டுமே பெற்றுள்ளார். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஆர்.மகேந்திரன்  145104 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து,  நாம் தமிழர்கட்சி வேட்பாளர் கல்யாண சுந்தரம் 60519 வாக்குகளும், அமமுக வேட்பாளர் என்.ஆர்.அப்பாத்துரை  38061 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 23190 வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளரின் வாக்குகளை மநீம வேட்பாளர் மகேந்திரன் அப்படியே பிரித்து சென்றிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அவர் பெற்றுள்ள சுமார் 1லட்சத்துக்கு 45 வாக்குகள் பாஜக தோல்விக்கு அச்சாரமாகி விட்டது என்பதுதான் உண்மை.

இந்த வாக்குகளை கூட்டி கழித்து பார்த்தால், மநீம, அமமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அதிமுக பாஜக வாக்குகளை பிரித்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பாஜகவின் தோல்வி அங்கு உறுதி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கோவையில் சிபிஆருக்க என தனி செல்வாக்கு உண்டு. ஆனால், மநீம கட்சிவேட்பாளர் பாஜக அதிமுவின் வாக்கு வங்கியை சரித்ததால், அங்கு பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.