டில்லி:

மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க,இன்று மாலை டில்லியில் தேசிய ஜனநாயக கட்சியினர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க  தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர்.  இதில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கேட்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை  5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கின்றனர். அத்துடன் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் விமானம் மூலம் டில்லி செல்கின்றனர்.