டில்லி,

மிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யுகொண்டு வரும் வேளையில், தமிழக எம்எல்ஏக்களுக்கு அதிரடி சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த  மார்ச் மாதம் டில்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் 41 பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

அதையடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்  தமிழக முதல்வர் எடப்பாடியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என கூறி மீண்டும் டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தின்போது, விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு 100 சதவிகித சம்பள உயர்வு அளித்து, மாத சம்பளமாக ரூ.1 லட்சத்து 5ஆயிரம் வழங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இதில் எங்களுக்கு சம்மதம் இல்லை என்றும்  விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தின்போது விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு பேசுகையில், ”இந்தியாவில் பிச்சைக்காரர்களாக இருப்பதைவிடவிவசாயிகளாக இருப்பது கேவலமானது, கடினமானது” என்றார்.

தொடர்ந்து இவர்கள் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.