ந்தியாவில் பெண்மையை போற்றும் வகையில், பெண்களின் மாதவிடாய் நாட்களில் முதல்நாள் விடுமுறை அளித்து பல்வேறு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது, கேரளாவில் பிரபல மலையாள தொலைக்காட்சி நிறுவனமான மாத்ருபூமி நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் போது, முதல்நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியது மும்பையை சேர்ந்த கல்சர் மெஷின் என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம்.

இதுகுறித்து பேசிய அந்நிறுவன தலைவர்,  பெண்களின் வலியை நாம் உணர்ந்து கொள்வதில்லை. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பணிக்கு வந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியவில்லை. இதனால், அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து விடுமுறை அளிக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பு நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது.

இதுபோல் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு ஆன்லைனில் கோரிக்கையை யும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு பிரபல தொலைக்காட்சி ஊடக நிறுவன மான மாத்ருபூமி, தங்கள் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல்நாள்  சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் சுமார் 75 பெண்கள் வேலை செய்கின்றனர். நிறுவனத்தின் அறிவிப்புக்கு அந்நிறுவன பெண் ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் கூறியதாவது:

நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் உழைக்கும் எங்கள் மகளிர் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம் என்றார்.

இதுவரை தொலைக்காட்சி சேனல் மட்டுமே உள்ள இந்நிறுவனம், விரைவில் டிஜிட்டல் மற்றும் தினசரி பிரிவுகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.