சென்னை:
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு தேவைப்படுகிறது. இதையடுத்து ஆக்சிஜன் படுக்கைள், தமிழகம் முழுவதும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 130 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்பட்ட நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு போரில் இந்த அரசு தொடர்ந்து தீவிரமாக பணியாற்றும்.

தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட கொரோனா ஒழிக்கப்படும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த நாளை விரைவில் எட்டும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.