சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியார் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு  அரசு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

தீபாவளி பண்டிகை நாளை (12ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கடந்த இரு நாட்களாக அரசு மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (10/11/23) இரவு திடீரென கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அங்குள்ள பயணிகளிடம் விசாரணை நடத்தி நேரடி ஆய்வு செய்தார். பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களையும் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர்,  “தீபாவளி பண்டிகையொட்டி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று (09.10.2023) 2734 பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 700 பேர் பயணம் செய்து சொந்த ஊர் சென்றுள்ளனர். அதே போல் இன்றைக்கு இதுவரை 1442 பேருந்துகள் இயக்கப்பட்டு 68 ஆயிரத்து 910 பேர் பயணம் செய்துள்ளனர். இன்றைக்கு மொத்தமாக 3200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தீபாவளியின் போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவிலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பான முறையில் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து முன்பதிவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்தார்.