சென்னை: பெரியார் குறித்த  அண்ணாமலை பேச்சால் பா.ஜ.க. டெபாசிட் இழக்கும் என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்து களை அண்ணாமலை வெளிப்படுத்துகிறார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன சமூக அடக்கு முறைகளை, அநீதிகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமை கொடுமைகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத் திற்காக பாடுபட்ட அற்புதமான தலைவர் பெரியார்.

இந்து மதத்திலே ஊறிப்போன சனாதன, பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கை கொண்ட பழக்க வழக்கங்களுக்கு மக்கள் பலியாகக் கூடாது என்று சில கருத்துகளை வலிமையாக பெரியார் தனது பரப்புரையில் கூறியிருக்கிறார்.  இதில் மாற்று கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலையைப் போல நாகரீகமற்ற முறையில் பெரியாரை விமர்சனம் செய்தது கிடையாது.

நீதி கட்சி ஆட்சிக் காலத்தில் இருந்து தமிழக மக்கள் அனுபவித்து வந்த இடஒதுக்கீடுக்கு நீதிமன்றங்களால் ஆபத்து வந்த போது, அரசமைப்புச் சட்டம் 1950 இல் அமலுக்கு வந்தவுடனேயே அதற்காக திருச்சியில் குரல் கொடுத்து போராடியவர் பெரியார்.

அந்த போராட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்து அந்த இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அன்றைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தியவர் காமராஜர். அதனடிப்படையில் தான் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு முதல் திருத்தம் கொண்டு வந்து இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கினார். அதனடிப்படையில் தான் இன்றைக்கும் பின் தங்கிய, பட்டியலின மக்கள் இடஒதுக்கீட்டை 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள்.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் சமூக நீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது. இத்தகைய அருவெறுக்கத்தக்க அநாகரீக பேச்சுகளினால் பா.ஜ.க. குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி.

தமிழக அரசியல் வரலாற்றை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப் போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வருகிற 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது.

எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.