சென்னை:
னது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வதந்தி பரவியது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தீயாக தகவல் பரவியது. இதனால், கரூர் மாவட்டம் அல்லாது தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை ஏதும் நடைபெறவில்லை’ என விளக்கம் அளித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் தெரிவித்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனன், ‘சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம். ஆனால், வருமானவரித்துறையினர் ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும், ஐ.டி ரெய்டு குறித்து தகவல் அறிந்து 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.