சென்னை:  தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நுழையாது என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் கல்வி த்துறையில் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம். மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் நடைப்பெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினோம். திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எம்.ஏ.அரசியல் அறிவியல் பாடத்தில் திமுக குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணமே செலுத்தாமல் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் தவறான விசயங்களை திட்டமிட்டு திணித்துள்ளனர்.

எம்.ஏ முதலாமாண்டு சமூக அறிவியல் துறையில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர். எனவே துறை தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக வேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழு நியமனம் செய்து, முதல்வருடன் கலந்து பேசி, நடவடிக்கை எடுக்கப்படும். சூரப்பா மீதான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை எல்லாம் தவறுதலாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற புகார்கள் வந்துள்ளது. குழு அடைப்படையில் நியமனம் செய்வார்கள் என அமைச்சர்கள் மீதே புகார்கள் வந்தன. அதை முறைப்படுத்தி தற்போது நியமனம் செய்ய உள்ளோம். பணம் பெறும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படு வார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்வார்கள். யாராவது பணம் அளித்தால் நியமனம் என கூறினால் நம்ப வேண்டாம்.

தேர்வுக்கான தொகையை 23 தனியார் கல்லூரிகள் கட்டாமல் உள்ளனர். ஆனால் தேர்வு எழுத எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. வரும் திங்கள்கிழமைக்குள் பணத்தை கட்ட வேண்டும். இல்லையென்றால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.

புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளின் தலையீடு. எனவேதான் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகும். அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.