ரோடு

சாலைப் பணியாளர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பாவிட்டால் துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ வ வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஈரோடு மாவட்டம் கோபியில் பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 6-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோபி வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையொட்டி போராட்டம் தொடர்வதாக சாலைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்துக்குத் தமிழக அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.  இன்று, நெடுஞ்சாலைத்துறை கோபி கோட்ட பொறியாளரைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும்) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈரோட்டில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம்,

“சாலைப் பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே, சாலைப் பணிகளுக்குத் தான் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் அவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை என்பதும் விதிகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இங்குச் சிலர் சங்கம் என்ற பெயரில் சாலைப் பணியாளர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.”

எனத் தெரிவித்துள்ளார்.