சென்னை:

றைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்க மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது,

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்ததைவிட பிரதமராக இல்லாத நேரத்தில் அவருடன் நான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.

இன்று நாம் பார்க்கும் பல காட்சிகள், தொலைக்காட்சி, கணினி, கைபேசி, தடுப்பூசி, அரசு செயலாளர்களுக்கு இணையாக கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம், அனைத்தும் அவர் கொண்டு வந்தது.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் அவர் கொண்டு வந்த யுகப்புரட்சி. இப்போது அதை முடக்க பார்க்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சமாதான பிரியர். சமாதானத்தை நேசித்ததில் போப் ஜானுக்கு பிறகு ராஜீவ் ஒருவர்தான் உலக அளவில் உயர்ந்து நிற்பவர்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று விரும்புகிறோம். 2 அணு ஆயுதங்கள் இல்லாமல் ஒரு நாட்டை வல்லரசு நாடாக உலகம் ஏற்காது. அதனால்தான் இந்திராகாந்தி அணுகுண்டு சோதனை நடத்தினார். அதன் பிறகுதான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா சேர்ந்தது.

ராஜீவ் நினைத்து இருந்தால் அணு ஆயுதங்களை குவித்து இருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ஒரு அணுகுண்டு சோதனை கூட நடத்தியது கிடையாது. இந்தியாவின் பலம் அவருக்கு தெரியும். அணு ஆயுத ரகசியம் பிரதமர் உள்பட 4 மந்திரிகளுக்கு மட்டும் தெரியும்.

ஆனால் அவர் விரும்பியது உலகம் முழுவதும் சமாதானம் வேண்டும் என்பதுதான். பஞ்சாப், காஷ்மீர், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் சமாதான உடன்பாடு மேற்கொண்டார். அசாமில் போராடிய மாணவர் இயக்கத்துக்கு ஆட்சியை விட்டுக் கொடுத்தார்.

அவர் மேற்கொண்ட இன்னொரு சமாதான முயற்சியால், எந்த இனம் எல்லா உரிமைகளோடும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று பாடுபட்டாரோ அதே இனத்தால் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

அந்த சமாதான முயற்சியின் போது ஆபத்தும் இருக்கிறது என்பதை அவர் அறியாமல் இல்லை. அதுபற்றி அவரிடம் நான் கூறிய போது, ‘நான் ஆபத்தை பற்றி கவலைப்படவில்லை. எப்பாடு பட்டாவது இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

சமாதான தூதுவர்கள் கொல்லப்படுவது புதிதல்ல.

ஆபிரகாம்லிங்கன், மகாத்மா காந்தி, கென்னடி போன்றோர்கள் கொல்லப்பட்டார்கள். ராஜீவும் சமாதான தூதராக இருந்ததால்தான் கொல்லப்பட்டார்.

இலங்கை தமிழின மக்களுக்காக மேற்கொண்டு வரும் சமாதான முயற்சியில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் என்று இருந்தார்.

சமாதானம் ஏற்பட்டு விடும் என்று அஞ்சியவர்கள்தான் அவரது உயிரை பறித்து விட்டார்கள்.

( கண்ணீர் விட்டு அழுதார்)

நாட்டில் இன்று அமைதி நிலவுகிறதா? காஷ்மீரில் 2014-ல் 47 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். 2015-ல் 39 பேர், 2016-ல் 82 பேர், இந்த ஆண்டு இதுவரை 15 பேரை இழந்திருக்கிறோம். எதற்காக இந்த உயிர் பலிகள்? யாருக்காக இந்த ராணுவ வீரர்கள் இறக்கிறார்கள்?

அமைதி, நல்லுணர்வு, ஒற்றுமை, இருக்கும் சமுதாயத்தில்தான் பொருளாதாரம் வளரும். அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும்.

சமாதானத்தை விரும்புபவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று பைபிள் சொல்கிறது. அந்த வகையில் சமாதானத்தை நேசித்து வாழ்ந்த ராஜீவும் கடவுளின் குழந்தை.

இவ்வாறு அவர் பேசினார்.

நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் இசை அஞ்சலி நடைபெற்றது.

இந்த நினைவுநாள் கூட்டத்தில்  முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்த குமார், வள்ளல் பெருமான், ராயபுரம் மனோ உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று (21.5.2017) திருப்புரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.