புதுடெல்லி: முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தலைமை வகிக்கும் பிடிபி கட்சியின் 2 ராஜ்யசபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென மெஹ்பூபா விரும்புவதாக காஷ்மீரிலிருந்து வரும் உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அரசியல் சாசன அந்தஸ்தை ரத்துசெய்து, அம்மாநிலத்தை பிரித்து 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் வகையிலான புதிய சட்ட மசோதா சமீபத்தில் ராஜ்யசபாவில் தாக்கலானது. அப்போது, அரசியல் சட்டத்தை கிழித்து எறிந்ததோடு, தங்களின் ஆடைகளையும் கிழித்துக்கொண்டர் அக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும்.

மீர் ஃபயாஸ் மற்றும் நசீர் அகமது லவாய் ஆகிய அந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற செய்தியை மெஹ்பூபா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், மெஹ்பூபா அவரின் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, விருந்தினர் விடுதியில் கைதி நிலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், காஷ்மீரில் இணையம் மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதால், முறையான தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் நிலவுகிறது.

“நாங்கள் ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்திருந்தாலும், கட்சித் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புகிறோம். முறையான தகவல்தொடர்பு இல்லாத காரணத்தால் எதையும் உறுதிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்போம்” என்றனர்.