புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற ராஜ்யசபா அமர்வுகளில், சமீபத்தில் நிறைவடைந்த அமர்வுதான் மிகப் பயனுள்ள அமர்வாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 7ம் தேதியோடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா, தனது 249வது அமர்வை நிறைவு செய்தது. இதன் பயன்விளைவு 104% என்று மதிப்பிடப்படுகிறது.

முத்தலாக் மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிப்பு ஆகிய சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேறிய இந்த ராஜ்யசபாவின் அமர்வு, கடந்த 41 ஆண்டுகளில் 5வது சிறந்த அமர்வு என்றும் கூறப்படுகிறது.

இந்த அமர்வில் மொத்தம் 19 முறை அலுவல் நேரத்திற்கும் அதிகமாக ராஜ்யசபை செயல்பட்டுள்ளது. இடைஞ்சல்களால் வீணான நேரம் என்பது 9 மணிநேரங்கள் மற்றும் 12 நிமிடங்கள் மட்டுமே. கடந்த பல்லாண்டுகளில் இது மிகவும் குறைவான நேர விரயம் என்று மதிப்பிடப்படுகிறது.

ராஜ்யசபா தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு கூறுகையில், “இதே நிலையே எதிர்காலத்திலும் நீடிக்க வேண்டும். இத்தகைய பயன்மிகு அமர்வு சூழலை எதிர்காலத்திலும் தொடர்வதுதான் நமக்குள்ள சவாலே!” என்றார்.