தொடர்ச்சியாக 25 முறை ஹஜ் பயணம் – பெங்களூரு முஸ்லீமின் சாதனை!

Must read

பெங்களூரு: தக்குல்லா கான் என்ற பெங்களூரு வாழ் முஸ்லீம் ஒருவர் இதுவரை மொத்தம் 25 முறை தொடர்ச்சியாக ஹஜ் பயணம் மேற்கொண்ட ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவராக விளங்குகிறார். அவருக்கு தற்போது வயது 62.

இவர் முதன்முதலாக தனது ஹஸ் பயணத்தை கடந்த 1994ம் ஆண்டு துவக்கினார். அதுமுதற்கொண்டு இந்த 2019ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சென்று வருகிறார். மேலும், தற்போது தனது 26வது ஹஜ் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

முஸ்லீம் மதத்தின் சந்திர நாற்காட்டியில் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மேற்கொள்ளப்படும் ஹஜ் பயணம் தவிர, உம்ரா எனப்படும் பயணத்தை இவர் 126 தடவைகள் மேற்கொண்ட சாதனையையும் புரிந்துள்ளார். உம்ரா எனப்படுவது ஆண்டின் எந்த தேதியிலும் மெக்கா மற்றும் மெதினா நகரங்களுக்கு சென்றுவருவதாகும்.

முஸ்லீம் மத கட்டளைப்படி, ஒரு முஸ்லீம் என்பவர் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகின் பல முஸ்லீம்களுக்கு தங்களின் வாழ்நாளில் ஒருமுறையேனும் அந்த வாய்ப்பு கிடைப்பது பெரிய அதிசயமாக உள்ளது. ஆனால், தக்குல்லா கானின் கதையே வேறாக உள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு இவர் தனது பெற்றோரை முதன்முதலில் ஹஜ் பயணம் அனுப்பி வைத்தார். அப்போது, அவரின் தாயார் தனது மகனுக்காக ஒரு வேண்டுதல் வைத்தார். அதன்படி, தக்குல்லா ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயண வாய்ப்பை பெறுவார் என்று முன்கணிப்பு அளித்தார். அதன்படியே, தற்போது வரை தொடர்ச்சியாக 26வது ஆண்டாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மிக அரிய வாய்ப்பை பெற்று வருகிறார் தக்குல்லா கான்.

More articles

Latest article