சென்னை:
யோமெட்ரிக் வருகைப்பதிவு உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை , திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் மூன்று கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.