சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய  64 இடங்களில்61 இடங்களில் தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது என சென்னை  மாநகராட்சி  தெரிவித்து உள்ளது. புரசைவாக்கம் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு வரும் நிலையில், அதை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்

பருவமழை காலங்களில் சென்னை சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில்  சாலைகளில் மழைநீர் தேங்குவது.  இதை தடுக்கும் வகையில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டது.  சென்னையின் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கடந்த இரு ஆண்டுகளாக செய்யப்பட்டது. இதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இருந்தாலும் பல இடங்களில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. பின்னர், அதை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. , சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்  கடந்த 3 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, காலையில் வேலைக்கு செல்பவர்கள் முதல் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் வரை பலரும் சிரமமடைந்தனர்.

இதனையடுத்து, தண்ணீர் தேங்குவது தொடர்பான அதிரடியாக ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடம் அவர் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில்,  சென்னையில் 64 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 61 இடங்களில் தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்காமல் வாகன போக்குவரத்து சீராக உள்ளது, மழைநீரை வெளியேற்றும் பணியில் மொத்தம் 260 நீர் இறைக்கும் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன என்றும், மழைக்காக 162 நிவாரண முகாம்கள் தயாராக உள்ள நிலையில், அவற்றில் யாரையும் தங்க வைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற உத்தரவிட்ட மேயர் பிரியா,  அங்கு சென்று நேரடி ஆய்வு செய்தார்.

சென்னையில் மீண்டும் குளம்போல தேங்கும் மழைநீர்! நேற்று வியாசார்பாடி பாலம், இன்று புரசைவாக்கம்…