சென்னை: சென்னையில்  மழை பெய்து வருவதால் பல பகுதிகளில்  மீண்டும் குளம்போல  மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  கடந்த இரு நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி பாலத்தில் இருந்த தண்ணீரில்  மாநகர பேருந்து சிக்கி பெரும்பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது இன்று புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் தேங்கி தண்ணீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், பகல் நேரங்களில் விட்டுவிட்டும், இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையில் தேங்கும் மழைநீரை உடடினயாக அகற்ற தேவையான பம்புகள், பணியாட்கள் என அனைத்தும் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், சென்னையின் பல சாலைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து புகார் வந்ததும், உடனே அதிகாரிகளும், மாநகராட்சி பணியாளர்களும் விரைந்த வந்து மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். சென்னையில்7 உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் பெருமளவு வெள்ளநீர் தேங்கியுள்ளது. அந்த நீரை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றி வருகின்றனர்

இருந்தாலும் வடசென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் நடந்துசெல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை வியாசர்பாடி  மூலக்கொத்தளம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் சென்னை மாநகரப் பேருந்து ஒன்று செல்ல முயன்றபோது, மழைநீரில் சிக்கிக் கொண்டது. இது தொடர்பாக, தகவல் அறிந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் பேருந்து பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைந்து சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இதனால் சுமார் 4மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரத்தில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில்குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக தண்டையார்பேட்டை நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. வியாசர்பாடி எம்கேபி நகர் கிளை நூலகத்தில் மழைநீர் தேங்கியதால், நூலகத்துக்குள் யாரும் நுழைய முடியாத நிலை நீடித்தது. மேலும் தண்டையார்பேட்டை இளைய தெரு, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை, ராஜாஅண்ணாமலை சாலை, நுங்கம்பாக்கம் வீரபத்திர தெரு, ஸ்டெர்லிங் சாலை, பிராட்வே பிரகாசம் சாலை, பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் அருகில், புளியந்தோப்பு பகுதியில் அங்காளம்மன் கோயில் தெரு, சிவராவ் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் மற்றும் டிமெல்லோஸ் சாலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய சாலை, பெரம்பூர் அருந்ததி நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

சென்னை எம்.ஐடி அருகே மழைநீர் தேங்கி இருந்ததால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் நுங்கம்பாக்கம் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இது தவிர சென்னையில் பல்வேறு இடங்களில் வடிகால் பணிகள் நடந்து வருவதால் நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையம் சார்பில் தொடர்ந்து பல்வேறு பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று புரசைவாக்கம், பெரியார் நகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. சென்னை புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் 20 குதிரை திறன் உள்ள மூன்று மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.   மேலும், பள்ளிகள் அதிகம் உள்ள ரித்தர்டன், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் பகுதியில் பல ஆண்டுகளாக மழைநீர் தேங்கி வரும் நிலையில், அதை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினாலும், தண்ணீர் தேங்குவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பல இடங்களில் தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சீருடையுடன் பள்ளிகளுக்கு மழைநீரை கடந்து செல்லமுடியாமல் மாணவர்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாயினர். பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ராட்சத மோட்டார்களைக் கொண்டு மழைநீரை வெளியேற்றினர்.

ஒவ்வொருமுறை தண்ணீர் தேங்கியதும், மாநகராட்சி பணியாளர்கள் மோட்ர் பம்ப் கொண்டுவந்து தண்ணீரை இறைத்து வெளியே விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள்  கடும் அவதிப்படுகின்றனர்.   மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.