சென்னை: சென்னையின் முதல் ‘U’ வடிவ மேம்பாலத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இந்த மேம்பாலமானது, ஓஎம்ஆர் சாலை எனப்படும் ராஜீவ் காந்தி சாலை – இந்திரா நகரை இணைக்கும் வகையில் ‘யு (U)’ வடிவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  ஓ.எம்.ஆர் சாலையில் (ராஜீவ்காந்தி சாலை)  18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ’U’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.  இந்த ’U’ வடிவ மேம்பாலம் சென்னையில் கட்டப்பட்டுள்ள முதல் ’U’ வடிவ மேம்பாலம்  என்ற பெருமை பெற்றுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், இதன் மூலம் ஓ.எம்.ஆர் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ராஜிவ் காந்தி சாலை மற்றும் ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 20 நிமிடம் வரை ஆகிறது. அதே நேரத்தில் பீக் அவர்சில் 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. இந்தச்சாலையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்தி, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே U வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்க 2019 ஜூலை மாதம் அரசு அறிவித்தது. நவம்பர் மாதத்தில் ரூ.108.13 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. 2020ல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 4ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலப்பணிகள் முடிவடைந்த நிலையில், து சோதனை ஓட்டமும்  நடத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில்,  இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் பொது பயன்பாட்டுக்கு  திறந்து வைக்கப்பட்டது.

திருவான்மியூர்  இந்திரா நகர் பகுதியில் உள்ள டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள இந்த    ‘யு’ மேம்பாலம்,  12.5 மீட்டர் நீளமுள்ள 19 தூண்களை கொண்டது. பாலத்தின்  இருபுறமும் 120 மீட்டர் நீள அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.  தரமணி சிஎஸ்ஐஆர் சாலையில் 140 மீட்டர் நீள அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர் திசையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் இந்திராநகர் மேம்பாலம் வழியாக ஏறி U டர்ன் செய்து, இந்திராநகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்ல இயலும்.