மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யாவுக்கு மன்மோகன் சிங் குடும்பத்தினர் கண்டனம்

Must read

 

டெங்கு காய்ச்சல் காரணமாக உடல்நலம் குன்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா அங்கு சிகிச்சை பெற்று வரும் மன்மோகன் சிங்கை நேரில் சென்று பார்த்ததுடன், மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து விசாரிக்கச் சென்ற அமைச்சர் தன்னுடன் புகைப்பட கலைஞரையும் அழைத்துச் சென்றதோடு, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரின் அந்தரங்க விவகாரத்தில் தலையிட்ட மத்திய அமைச்சர் அவரின் ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவை அவர் நீக்கினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரின் இந்த செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்ன் மகள் தமன் சிங், “எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எனது தந்தையை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா நேரில் வந்து நலம் விசாரித்ததற்கு நன்றி.

அதேவேளையில், அவரது வருகையின் போது அங்கிருந்த எனது தாயார் புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று பலமுறை கூறியதையும் பொருட்படுத்தாமல் அமைச்சருடன் வந்த போட்டோகிராபர் புகைப்படம் எடுத்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

எனது தாயார் கூறியதை கேட்டு புகைப்படகாரரை தடுக்காத மன்சுக் மாண்டவ்யா அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.

சுகாதார அமைச்சரின் பதிவுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர், தாங்கள் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பதாக கூறிக்கொள்ள ஓரிரு இடங்களுக்கு பத்திரிகைப் புகைப்படக்காரர்களை அழைத்துச் செல்வதை பாஜக ஆட்சியாளர்கள் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்னும் பின்னும் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளின் பதிவுகளை ஏன் வெளியிடுவதில்லை ? என்றும்

அரசியல் ஆதாயத்திற்காக தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம் ? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More articles

Latest article