ஜெய்ப்பூர்

தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி டெல்லி, அரியானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டாசுக்குத் தடை விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் நலிவடையச் செய்யும் என்றும் தமிழகத்தில் மட்டும் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளதால், இதனைக் கருத்தில் கொண்டு பட்டாசுக்கான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதனால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலும் முடக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி  இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மானிக் தாக்குர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத்துக்கு எழுதி உள்ளார்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் மாநிலத்தில் பசுமை பட்டாசுகள் வெடிக்க மற்றும் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  இதையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அவருடைய மாநில மக்களின் நலனை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சிவகாசி மாவட்ட மக்களின் நலனையும் கவனத்தில் கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.