டெல்லி: அகில இந்திய காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது இன்றைய கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்ததால்,  படுதோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைமைப் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்க முடியாத நிலை தொடர்கிறது. சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்.

முறையான கேப்டன் இல்லாத கப்பல் போல் 2 ஆண்டுகளாக  மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ்  தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 2021 ஜனவரி 22 ல்  நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர், நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு கட்சித் தலைவருக்கான தேர்தலில் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2015ல் நடத்த வேண்டிய தேர்தல் 2017ல் தான் நடத்தப்பட்டது. பெரும்பாலும், தேர்தல் தவிர்க்கப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒரு மனதாக வே தலைவர்களும் குழுக்களும் நியமனம் செய்யப்பட்டது.  கட்சித் தலைவராக ராகுலை தேர்ந்தெடுக்கும் போது கூட, அவருக்கு போட்டியாளர் யாருமே இல்லை. எனவே போட்டியின்றி அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராகுலும் பதவி விலகிய நிலையிலும் மீண்டும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸுக்கு புதிய தலைமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அபிஷே மனு சிங்வி உள்ளிட்ட 23 பேர் கோரிக்கை ஒன்றை கட்சி தலைமைக்கு வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது. இந்த கூட்டத்தில், அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.  மேலும், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்பட  ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், விவசாயிகள் போராட்டம், எரிபொருட்களின் விலைவரலாறு காணாத உயர்வு  குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கூட்டம் முடிவைத் தொடர்ந்தே கட்சித் தலைவர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகுமா அல்லது இடைக்காலத் தலைவராக சோனியாவே நீடிப்பாரா என்பது தெரிய வரும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் இரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி என்பது உயர் நிர்வாக அதிகாரங்களை உடைய தலைவர்களைக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு . இதில் கட்சி தலைவர், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என  23 உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பர். அதில் 12 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதமுள்ள 11 பேர் கட்சி தலைவரால் தேர்வு செய்யப்படுவர்.